பாலாவின் விரல்களின் குரல்கள்


கவிஞர் தங்கம்மூர்த்தி தொகுத்துள்ள கவிதைவெளியினிலே நூலில்
   நான் எழுதியுள்ள முன்னுரை



மிழ்க்கவிதை, தனது உணர்ச்சியின் திவலைகள் சொட்டி நனைந்த காவியப் படிமானங்களிலிருந்தும், மண்ணில் கால்பதிக்காத அதீத கற்பனாவாதத்திலிருந்தும், மக்களை மறுதலித்த நிலஉடைமைக் கால கருத்தோட்டங்களிலிருந்தும், மொழியின் பூட்டப்பட்ட சட்டகங்களிலிருந்தும் வெளியேறவேண்டிய நிர்பந்தத்தை முதலில் எதிர்கொண்டவன் பாரதி.  அவன்தான் புதிய யுகத்திற்கான கவிதை மொழியோடு தமிழின் நவகவிதையை ஆரம்பித்து வைத்தான்.


தொடர்ந்து இந்தியத் தத்துவச் சாயலோடும், தமிழ் மரபின் ஓசையோடும் ‘எழுத்து” மற்றும் பிற கவிதை இயக்கங்கள் எழுச்சி பெற்றன.  பழைய வடிவம் மற்றும் உள்ளடக்கத் தளைகளிலிருந்து கவிதையை விடுவிக்க அவர்கள் தம் “புதுக்குரல்”;களால் முயற்சித்தனர்.
அவர்களுக்கு முற்றிலும் எதிர் நிலையில் நின்று புத்தாக்கம் செய்யப்பட்ட படிம, உருவக அழகுகள் கொண்ட வடிவத்தோடும், மனித குலத்தின் மாபெரும் துயரங்களுக்கு மாற்றுகாண விழைந்த உள்ளடக்கத்தோடும் வானம்பாடிகள் தங்கள் இயங்குதலை ஆரம்பித்தனர்.  இடதுசாரி கருத்தமைவுகளோடு கூடிய உணர்ச்சிகளை கவிதைகளில் வைத்து அவர்கள் மானுடம்பாடவந்த வானம்பாடிகள் என்று தங்களை அறிவித்துக் கொண்டனர்.
 இந்நிலையில் புதுக்கவிதைக்கான எதிர்ப்புக் குரல்கள், அறிஞர்களின்
புறக்கணிப்புகள், பண்டிதர்களின் ஏளனங்கள் கிளம்பின. கவிதையின் புத்தியக்க எழுச்சி கண்டுகொள்ளப்படாத எழுபதுகளில் அனைத்து புதுக்கவிஞர்களையும் தன் தோளில் ஏற்றிக்கொண்டு அனைத்துக் கவிதைகளையும் தன் மடியில் குவித்துக்கொண்டு அக்கவிதைகளின் ஆழத்தின் உச்சிகளையும் சிகரத்தின் ஆழங்களையும் உலகுக்கு உரத்த குரலில், ஒப்பற்ற கவிதை மொழியில் முன் வைத்து அதன் மூலம் தமிழில் ஒரு புதிய கவிதைக் காலத்தை நிர்மாணித்து புதுக்கவிதையை தன் புதுப்பார்வையால் அனைவரையும் உணர்ந்து ஏற்கச் செய்தவர் கவிஞர் பாலா.


வானம்பாடிக் கவிஞர்கள் எழுச்சி பெற்ற பின்தான் புதுக்கவிதை மக்கள் அரங்கத்துக்குச் சென்றது. அதுவரை குறுகிய வட்டத்திற்குள் இயங்கி வந்த கவிதை கல்வித்துறையின் ஏற்பினைப் பெற்றது.  புதுக்கவிதை ஒரு மக்கள் இயக்கமாகவே மாறியது. இவற்றுக்கெல்லாம் காரணமாயிருந்த கவிஞர்சிற்பி முதலான கவிஞர்களில் மிக முக்கியமானவர் பாலா.
கவிஞர் பாலா தனது “புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை”  நூலின்  மூலமும் விமர்சனக் கட்டுரைகள், முன்னுரை பின்னுரைகள் ஆகியவற்றின் மூலமும் புதுக்கவிதைகளின் மீது சரியான அளவிலும் கோணத்திலும்  வெளிச்சம் பாய்ச்சி அதன் நுட்பமான உண்மையின் பரிமாணங்களை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், அவற்றின் வெற்றி நிலை மந்தப்பட்டிருக்கும் என்பதை திறந்த நேர்மையோடு ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.
 
தமிழ்க் கவிதையின் அடிமனச் சரஓடையில் இறங்கி அதன் அகவெளியை பாலா அளந்து காட்டினாலும் ஒட்டுமொத்த இந்தியக் கவிதையுலகமும் எடுத்துக் கொள்ள வேண்டிய உயிர் ஓளி மிக்கதாய் இருப்பதை கற்போர் யாரும் அறிய முடியும்.
கவிதைகள் பற்றி அறியவும் உணரவும் விழையம் தற்கால, பிற்காலத் தலைமுறையினர் பாலாவின் கவிதை குறித்த நுட்பமான பார்வைப் பதிவுகளை, அவரின் சொற்களின் ஊடாக, வாழ்வின் உண்மைகளை கவிதையின் ஆன்மா கடந்து செல்லும் தருணங்களை புரிந்து கொண்டால் முழுமையான கவித்துவம் வாய்க்கப் பெறலாம்.
 
அம்மாதிரியான ஒரு அறிவுக் கொடையை அனைவருக்கும் வழங்கிடு ம்  பெருங்குணத்தோடு, கவிஞர் தங்கம் மூர்த்தி செம்மையாக உழைத்து பாலாவின் அனைத்து நூல்களிலிருந்தும் கவிதை குறித்த பார்வைகளை எடுத்துக் கோர்த்து இத்தொகுப்பினை உருவாக்கியுள்ளார்.

ந்திய இலக்கியத்தில் இவ்வளவு உரத்த தெளிவோடும் அதே சமயம்  ஆழ்ந்த அமைதியோடும் கவிதை விமர்சனத்தைப் பதிவு செய்திருப்பவர் கவிஞர் பாலாதான்.  நுட்பமான கவிதைகளின் ஒளிகசியும் படைப்பு ரகசியத்தை அவர் திறப்பு செய்து காட்டியுள்ளார்.
தமிழன் மிகப்பிரபலமான புதுக்கவிதை நூலான கவிஞர் மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப்பூக்கள்’ 25 பதிப்புகளுக்கு மேல் கண்டிருக்கிறதென்றால் அதற்கு அந் நூலில் பாலா எழுதிய முன்னுரையும் ஒரு முக்கிய காரணம்.
வானம் பாடிக் கவிஞர்கள் தொடங்கி தற்காலத் தமிழன் முக்கியக் கவிஞர்களுள் ஒருவரான தங்கம் மூர்த்தி வரை பாலாவின் கவிதை மண்டலம் விரிந்திருந்தது.  நூற்றுக் கணக்கான கவிஞர்களின் கவியாற்றலை அவர் வியந்து போற்றி வெளிப்படுத்தினார்.
இந்நூலில் கவிதைகள் குறித்து அவர் சொல்லிச் செல்லும் சித்திரங்கள் வசீகரமானவை அதே சமயம் மிகுந்த தத்துவ வலிமை கொண்டவை.


கவிதையை ‘வர்ணமடித்து பொய்யன்று, வாழ்க்கை உரைக்கும மெய்’- "அகவெளியில் கருதிகூட்டும் மௌன வெப்பம்" -"காற்றைக் கிழிக்கும் ஒரு பறவையின் எழுச்சி"- "சேரத்துச் சேர்த்து சேமித்த கனல்"-" உணர்வும் அறிவும் உயர்ந்த பிணைப்பில்இறுகிக் கிடக்கும் சொற்களின் கூட்டு"- என்றும்
"கவிதையின் சொற்கள் மறைந்து போய்விடுகிற பொழுது தான் கவிதை கிடைக்கிறது"என்றும அவர் எழுதிச் சொல்லும் அழகு அனைவரின் மனதிலும் கவிதை விளக்கினை ஏற்றி வைக்கும்.
“அடிக்கடி வந்து நம்முடன் ஒரு ஞாபகயுத்தம் செய்வதுதான் உயிருள்ள கவிதை.  நாம் விட்டுவிட்டுப் போன பின்னும், பின்னால்  ஓடிவந்து நம்விரல் தொட்டுப் பேசுவதுதான் கவிதை” என்ற பாலாவின் வரிகள் கூட நம் பின்னால்  எப்போதும் வந்து நிற்கின்றன. ஒரு ஞாபகயுத்தம் செய்தபடி.
 
வெற்று ஆரவாரங்களையும் வாழ்வனுபவத்தின் உட்பரிமாணங்களற்ற உணர்ச்சிப் பிரவாகங்களையும் காட்டும் செல்வாக்குமண்டலக் கவிஞர்கள், பாலாவின் கவிதைப் பார்வைகளை உள்ளேற்றிக் கொள்ள வேண்டும்.
 கவிதையின் விமர்சனச்சித்திரங்கள் ஒரு சிறந்த கவிஞராலேயே எழுதப்படும்போது அது எவ்வளவு அற்புதமாக அமைந்துவிடும் என்பதற்கு இத்தொகுப்பு உதாரணம்.

 
ந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வருபவர் கவிஞர் தங்கம் மூர்த்தி. அவருடைய முக்கியமான கவிதைகள் பல ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டு திசைகளெங்கும் பரவி வெற்றி பெற்றிருக்கின்றன.
பல இலக்கிய அமைப்புகள் தம் விருதுகளை தங்கம் மூர்த்திக்கு  வழங்கியிருப்பதன் மூலம் தமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.  தொலைக்காட்சி ஊடகங்களிலும் அவரது கவியரங்கங்கள் - வாசகப் பார்வையாளர்கள் வசப்படுத்தி வருகின்றன.
இவ்வாறு சிறப்புப் ப+க்களால் நிறைக்கப்பட்டிருந்தாலும் கவிஞர் தங்கம் மூர்த்தியின் பாதங்கள் வேர்களின் ஈரம்தரும் குளிர்ச்சியில் தான் லயித்து  நிற்கின்றன என்பதற்கு அவரின் ஆசிரியரும் ஆத்மார்த்த வழிகாட்டியுமான கவிஞர் பாலாவின் இலக்கியபணிகளை எடுத்துச் செல்வதே எடுத்துக்காட்டு.

கவிஞர் பாலாவின் “கவிதை வெளியினிலே” எனும் இந்தக் கவிதைப் பார்வைகள் கவிதையில் தோய்ந்து ஆழம் கண்ட மாகவிகள் முதல் இன்றைய புதுமொக்குகளாய் வரும் இளையகவிஞர்கள் வரை அனைவரின் சிந்தாநதியிலும் வெள்ளம் பாய்ச்சக் கூடியவை.
இத்தொகுப்புநூல் மற்ற இந்தியமொழிகளிலும் பெயர்க்கப்படுமானால் இந்திய இலக்கியப் பரப்புக்கு அது ஒரு பெருங்கொடையாக அமையும்.  கவிஞர் தங்கம் மூர்த்தியின்  வெற்றிகரமான பெருமுயற்சிகள் அதை சாத்தியப்படுத்தும் என நம்புகிறேன்.

நம்மை கடந்து சென்றுவிட்ட ஒரு பறவையின் குரல் மட்டுமே நம்மோடு தங்கிவிட்டதைப் போல பாலாவின் விரல்களின் குரல் இத்தொகுப்பு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Comments

Popular posts from this blog

எனது மொழிபெயர்ப்புகள்-1

எனது மதிப்புரைகள்