வெப்பம் சொட்டும் பூக்கள்
கவிஞர் சுவாதியின் - உலகே பூச்செண்டு- கவிதை நூலில் நான் எழுதியுள்ள முன்னுரையின் தொடக்கப்பகுதி அ திகாலைக் காட்டின் ர்ர்ர்ங்ங்ங்....... நிலம் தெளிந்த ர்ர்ர்ங்ங்ங்...... கருக்கலில் ர்ர்ர்ங்ங்ங்........... காயாம் பூக்களின் ர்ர்ர்ங்ங்ங்..கிறங்கடிக்கும் நறுமணத்தின் ர்ர்ர்ங்ங்ங் ஊடாக காதுகளில் சில்லிப்பாய் பாயும் வண்டுகளின் ரீங்காரம் . . . . பரந்து கிடக்கும் கண்மாயில் சலுக்... சலுக்... கணுக்காலளவு சலுக்சலுக்... வெள்ளி நீரில் தூக்கி அடி வைத்து சலுக்.... சலுக்.... நடக்கும் சிலிர்ப்பு..... திருவிழாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே புதுத்தெப்பம் கட்டுவதற்காக குளத்தில் ஊறப்போட்ட நீண்டமரங்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு கைகளால் துடுப்புபோட்டு அக்கரை சென்று மீளும் பிள்ளைப்பிராயம்....... பெருங்காற்றுக்கு எதிராய் முகங்கொடுத்து முடிக்கற்றை பின்னோக்கி விரைய எல்லைப் பொட்டலில் எடுப்புக் குதிரைகளை பார்க்க வேகநடைபோட்டுச் சென்ற திருநாள் நாட்கள்...... அருகாமை நகரத்தில் சினிமா பார்த்துவிட்டு பேருந்து இல்லாமல், நடுநிசியில், குறுக்குப் பாதைகளின் வரப்புகளில் சைக...