Monday, 9 April 2012

வெப்பம் சொட்டும் பூக்கள்


கவிஞர் சுவாதியின் - உலகே பூச்செண்டு- கவிதை நூலில்
   நான் எழுதியுள்ள முன்னுரையின் தொடக்கப்பகுதிதிகாலைக் காட்டின் ர்ர்ர்ங்ங்ங்....... நிலம் தெளிந்த ர்ர்ர்ங்ங்ங்...... கருக்கலில் ர்ர்ர்ங்ங்ங்...........  காயாம் பூக்களின் ர்ர்ர்ங்ங்ங்..கிறங்கடிக்கும் நறுமணத்தின் ர்ர்ர்ங்ங்ங் ஊடாக காதுகளில் சில்லிப்பாய் பாயும் வண்டுகளின் ரீங்காரம் . . . .

பரந்து கிடக்கும் கண்மாயில் சலுக்... சலுக்... கணுக்காலளவு சலுக்சலுக்... வெள்ளி நீரில் தூக்கி அடி வைத்து சலுக்.... சலுக்....  நடக்கும் சிலிர்ப்பு.....

திருவிழாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே புதுத்தெப்பம் கட்டுவதற்காக குளத்தில் ஊறப்போட்ட நீண்டமரங்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு கைகளால் துடுப்புபோட்டு அக்கரை சென்று மீளும் பிள்ளைப்பிராயம்.......

பெருங்காற்றுக்கு எதிராய் முகங்கொடுத்து முடிக்கற்றை பின்னோக்கி விரைய எல்லைப் பொட்டலில் எடுப்புக் குதிரைகளை பார்க்க வேகநடைபோட்டுச் சென்ற திருநாள் நாட்கள்......

அருகாமை நகரத்தில் சினிமா பார்த்துவிட்டு பேருந்து இல்லாமல், நடுநிசியில், குறுக்குப் பாதைகளின் வரப்புகளில் சைக்கிள் டயரைக் கொளுத்திக் கொண்டு நடக்கையில், அந்த நெருப்பு கண்டு தூரத்தில் ஊளையிட்டவாறே ஓடித்திரியும் நரிக் கூட்டத்துக்குப் பயந்து தொண்டைக் குழியில் எச்சில் தொட்டு வைத்தவாறு பாட்டுப்பாடி வீரம் காட்டிய பருவ நாட்கள்.................

மார்கழியின் தாமரைக் குளத்தில் மொட்டுகளின் கீழே இலைகளில் வெள்ளி முத்துக்களாய் ததும்பி நிற்கும் இசைப்பாடல்களோடு இணைந்து பாடிய தருணங்கள்...................

கிடாய்வெட்டு நாட்களின் நள்ளிரவில் கருப்பு வெளிச்சத்தில் ஊரெல்லாம் மணக்கும் கறிக்குழம்பும் சாம்பிராணியும் கலந்த வாசம்.

இப்படியான தருணங்கள் எல்லாம் எப்போதோ தொலைந்து போய் இந்த நகரத்தின் மின்சார அந்தியின் சோடியம் வேபர் வலைக்குள், வாகனத்தில் சிக்னலுக்காக நான் நிற்கிற தருணங்களிலும் நினைவுகளின் ஈர அலைக்கரை அடிமனதை நனைத்துக் கொண்டேதான் இருக்கிறது. கவிஞர் சுவாதிக்கு  முன்னுரை எழுதுகிற சாக்கில் இதோ இந்தத் தாட்களில் அது  கசிந்து ஊறுகிறது  

அந்த நனைவுதான் கவிதை மனங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.  அந்த நனைவுகளின் ஈரத்தோடு மனதின் ஈரத்தையும் சேர்த்து இந்த சமூகமாற்றத்திற்கான தனது பங்களிப்பை, ‘உலகே பூச்செண்டு’ என்ற குளிர்ந்த பெயரோடு, வெப்பமாக தந்திருக்கிறார் கவிஞர் சுவாதி. இது மனதில் ஈரம் நிறைந்ததனால் வெளியாகியிருக்கும் வெப்பம்.

No comments:

Post a Comment